2 வாரத்திற்கு முன் மாயமான காதலியை கொன்று உடலை மலைப்பகுதியில் வீசிய காதலன்: போலீசார் தீவிர விசாரணை
மும்பை: மகாராஷ்டிராவில் காதலியைக் கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசிய காதலன், கைபேசி இருப்பிடத் தகவல் மூலம் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி தாலுகா, மிர்ஜோலே கிராமத்தைச் சேர்ந்த பக்தி ஜிதேந்திர மயேகர் என்ற இளம்பெண், கடந்த இரண்டு வாரங்களாகக் காணவில்லை. போலீசார் வழக்குபதிந்து அந்தப் பெண்ணின் காதலனே அவரைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 17ம் தேதி பக்தி மயேகர் தனது தோழியின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால், கவலையடைந்த அவரது குடும்பத்தினர் ரத்னகிரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் முதல் கட்டமாக, பக்தியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிடத் தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர் காணாமல் போன அன்று கண்டாளா பகுதியில் இருந்தது தெரியவந்தது. அந்தப் பகுதியில் தான் அவரது காதலரான துர்வாஸ் தர்ஷன் பாட்டீலும் வசித்து வந்தார். இதனால், துர்வாஸ் தர்ஷன் பாட்டீலைக் கைது செய்து விசாரித்தபோது, தொடக்கத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி, விசாரணையைத் திசைதிருப்ப முயன்றார். ஆனால், தீவிர விசாரணையில், அவர் பக்தியைக் கொலை செய்ததாகவும், உடலை ஆம்பா மலைப் பகுதியில் வீசிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
அவர் அளித்த தகவலின் பேரில், மலைப்பகுதியில் பக்தி ஜிதேந்திர மயேகரின் உடல் மீட்கப்பட்டது. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, முக்கியக் குற்றவாளியான துர்வாஸ் தர்ஷன் பாட்டீலின் நண்பர்களான விஸ்வாஸ் விஜய் பவார் மற்றும் சுஷாந்த் ஷாந்தாராம் நரள்கர் ஆகியோரையும் கைது செய்துள்ளோம். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.