காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தேசிய அளவிலான தனி இணையதளம்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், காணாமல் போன குழந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக உச்சநீதிமன்றம் ஒரு புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட நபரின் ஜாமின் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் நலன் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடத்தப்படும் குழந்தைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உடனடியாக கைமாற்றப்படுகின்றன. அந்த அளவிற்கு மிகப்பெரிய 'சிண்டிகேட்'டாக இது செயல்படுகிறது. எனவே, இதன் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பொதுவான இணைய தளத்தை இதற்காக அமைக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் குறித்த விபரங்கள் அதில் முழுமையாக இடம் பெற்று இருக்க வேண்டும். இதில், சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாதிட்டனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; அதிக கவனம் செலுத்த வேண்டிய இந்த பிரச்னையில், தீர்வு காணக்கூடிய வகையில் அனைத்து மாநிலங்களையும் இணைத்து ஏன் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்கக் கூடாது?. மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லை. அந்த புகார்களுக்கு தொடர்புடைய அதிகாரிகள் இடையே போதுமான ஒருங்கிணைப்பு தேவை. இந்த வழக்குகளை தீர்க்க, ஒன்றிய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பில் தனி இணையதளம் செயல்படவேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.