குன்றத்தூரில் 1000 ஆண்டு பழமையான திருநாகேஸ்வர சுவாமி கோயிலில் அன்னதான கூடம், புதிய அலுவலகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
குன்றத்தூர்: குன்றத்தூரில் 1000 ஆண்டு பழமையான திருநாகேஸ்வர சுவாமி கோயிலில் ரூ.84.65 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள அன்னதான கூடம் மற்றும் புதிய அலுவலகத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோயில் கிபி 12ம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்டதாகும்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு சென்று வந்த பிறகுதான், சேக்கிழார் பெருமான் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் சிறந்த ராகு பரிகார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு புதிதாக அன்னதானக்கூடம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், ரூ.68 லட்சம் செலவில் அன்னதானக்கூடம் கட்டவும், புதிய அலுவலகம் கட்டவும் அரசு சார்பில் ரூ.16.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி நிறைவடைந்த நிலையில், இன்று காலை திறப்பு விழா நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், குன்றத்தூர் நகராட்சி தலைவர் கோ.சத்தியமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் மக்கள், பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது.