பக்தியை வைத்து பகையை வளர்க்கக்கூடாது பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது. பிரிவினை சக்திகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழும்பூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கிறது, சட்டப்பூர்வமாகவே செயல்படுகிறது.
இன, மத மோதல்களை தடுப்பதே தமிழ்நாடு அரசின் குறிக்கோள். 1920, 1930, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கேற்றப்படும் வழக்கமான இடத்திலேயே இந்நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது, சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை சனாதனம் என்பதல்ல இறைக்கொள்கை.
வடக்கில் இதுபோன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல் தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண், எல்லோருக்கும் எல்லாமுமான மண். அதோடு மட்டுமல்ல, ஒரு காலத்தில் வல்லபாய் பட்டேலை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றுவார்கள். இன்றைக்கு இந்தியாவே உற்றுநோக்குகின்ற இரும்பு மனிதராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்; அவருடைய ஆட்சியில் பிரிவினை என்பது ஒருநாளும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
இது சட்டத்தின் ஆட்சி, சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன, இறுதிவரை இன, மத மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன முயற்சி வேண்டுமானாலும் இந்த அரசு எடுக்கும்; முதல்வர் சட்டப்படியான போராட்டத்தை நடத்தி மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவார். இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகின்ற சூழ்நிலையை உருவாக்க நினைத்தார்கள் அது நடக்கவில்லை. அதை நடக்க விடாமல் தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் தமிழ்நாடு முதல்வர்.
பிறப்பால் வேண்டுமென்றால் மதங்கள் பிரிக்கப்படலாம், ஆனால் வாழ்க்கை நெறிமுறைகளில் மதங்களைப் பிரிக்க கூடாது. ஒரு தாய் மக்களாக தமிழ்நாட்டு மக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடையின் கீழ் நிற்பார்கள். கடந்த கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை உள்ளிட்ட 66 கோயில்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்;
மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்; நம் முன்னோர்களை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று பதிவிட்டு வரலாற்று ஆவணங்கள் எப்படி சொல்லுகிறதோ அதேபோல் 100 ஆண்டுகள் அல்ல, 500 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ‘திராவிட மாடல் ஆட்சி உடைய நாயகன் எங்கள் உயிரினும் மேலான அன்பு தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்ற பெயர் பொருத்திய வரலாறு இருக்கும்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை 2014, 2017 ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சிதான் இருந்தது. அந்த ஆட்சியில் தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது, அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை பாஜவிடம் அடிமை சாசனம் எழுதி தந்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.