மூத்த குடிமக்கள் 602 பேர் பங்கேற்கும் ராமேஸ்வரம் - காசி ஆன்மிக பயணம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப் பைகளை வழங்கி அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைத்தார். 602 மூத்த குடிமக்கள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் மார்க்கமாக காசிக்கு செல்கிறார்கள். நாளை மறுதினம் காசியில் தரிசனம் முடித்து, வருகிற 12ம் தேதி காலை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில் துறையின் சார்பில் ஒரு இணை ஆணையர், 5 உதவி ஆணையர்கள், 45 அலுவலர்கள், 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் உடன் செல்கின்றனர். இந்த ஆன்மிகப் பயணம் செய்பவர்களுக்கு போர்வை, ஸ்வெட்டர், துண்டு, குடை, பிஸ்கட் பாக்கெட்கள், டூத் பிரஸ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், எவர்சில்வர் தட்டு, குவளை உள்ளிட்ட 18 பொருட்கள் அடங்கிய பயண வழிப்பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் லட்சுமணன், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் பொது மேலாளர் ரவிக்குமார், துணைப் பொது மேலாளர் சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, சு.மோகனசுந்தரம், ஜ.முல்லை, உதவி ஆணையர்கள் கி.பாரதிராஜா, க.சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.