அமைச்சர் நாசர் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், திருவள்ளுர் எம்பி ச.சசிகாந்த்செந்தில், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி கூறியதாவது: வர இருக்கின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த 2015ல் ஏற்பட்ட பேரிடர் போல் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காகதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
2023ம் ஆண்டு கிட்டதட்ட 43 செமீ அளவுக்கு மழை பெய்தும் 36 மணி நேரத்தில் அதிகாரி கள் தீவிரமாக செயல்பட்டு எவ்விதமான இடர்பாடுகளும் இல்லாமல் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபோன்று வருகின்ற பேரிடரையும் எதிர்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.