புராதன பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்ட நவீன கூட்ட அரங்கம் திறப்பு; அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
சென்னை: சுமார் 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்ட நவீன கூட்ட அரங்கத்தை வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 1864ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டிடக் கலை நயத்துடன், மெட்ராஸ் நாட்டு தளக்கூரை மங்களூர் ஓட்டு கூரை மற்றும் தேக்கு மர உத்திரங்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு, புரொஜெக்டர், எல்இடி ஸ்க்ரீன், வைபை வசதி, சிறந்த ஆடியோ, வீடியோ மற்றும் ஸ்பீக்கர் வசதிகளுடன் 100 முதல் 150 பேர் வரை அமரக்கூடிய நவீன கூட்டரங்கத்தை அலுவலக பயன்பாட்டிற்கு அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து, திறந்து வைக்கப்பட்ட நவீன கூட்டரங்கத்தில் 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.