ஆவின் என்றால் சுண்ணாம்பு, வடஇந்திய கம்பெனிகள் வெண்ணையா? ஆவின் குறித்த விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
சென்னை: ஆவின் குறித்த விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆவின் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான நெய், பன்னீருக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. பண்டிகை காலம் முடிவடைந்ததையடுத்து, வழக்கமான விலை மாற்றப்பட்டது. உற்பத்திச் செலவில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சில தயாரிப்புகளின் விலைகளில் தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆவின் நெய்யின் விலை தற்போது லிட்டருக்கு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில கருத்துகள் வெளிவந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஆவின் என்றால் சுண்ணாம்பு, வடஇந்திய கம்பனிகள் என்றால் வெண்ணையா?. உலகிலேயே மிக குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் ஆவின். இந்த நிறுவனத்தின் லாபம் தனியார் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் பையில் போகாது. மாறாக, தமிழகத்தின் சிறு, குறு நிலப் பால் உற்பத்தியாளர்கள், ஏழை விவசாயிகள் என அவர்களுக்கே ஊக்கத் தொகை, போனஸ் போன்ற வடிவங்களில் நேரடியாக திரும்பிச் செல்கிறது. இதுதான் ஆவின் நிறுவனத்தின் தனித்துவமும், தமிழக அரசின் மனிதநேய கொள்கையுமே ஆகும்.
பாஜ அரசு விதித்த ஜிஎஸ்டியால் பால் உற்பத்தி செலவு கூடுகிறது. விவசாயிகளின் வலி தெரியாமல் விமர்சிப்பது இவர்களின் கார்பரேட் மனநிலையை காட்டுகிறது. இதனுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதன்படி முதல் முறையாக லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலன் அடைந்து வருகிறார்கள்.