திமுக அரசு கடன் வாங்குவதாக குறை கூறிய எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வளர்ச்சியே பதிலடி : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை : திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக் கல் இது" என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.9% என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19%-ஆக அதிகரித்துள்ளது.14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. வேறு எந்த ஒரு பெரிய மாநிலமும் பெறாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
இதற்கு முன்னர் 2010-11ம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. நிபுணர்கள் கணித்தை விட அதிகமான அளவு பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திமுக அரசு நிகழ்த்திய சாதனையை திமுக அரசுதான் முறியடிக்கும் என்பதை மு.க.ஸ்டாலின் அரசு நிரூபித்துள்ளது. திமுக அரசு கடன் வாங்குவதாக குறை கூறிய எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வளர்ச்சியே பதிலடி கொடுத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க நிலையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. தனிநபர் வருமானத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம். நம்முடையை சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்ற வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக் கல் இது."இவ்வாறு தெரிவித்துள்ளார்.