ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை: காவல் நிலையத்தில் காங். மாணவர் சங்கம் புகார்
திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என்று கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு குருவாயூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மாணவர் சங்கமான கேஎஸ்யுவின் திருச்சூர் மாவட்ட தலைவர் கோகுல் நேற்று குருவாயூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு:
திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி எம்பியும், ஒன்றிய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை கடந்த சில தினங்களாக காணவில்லை. சட்டீஸ்கரில் கேரள நர்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தான் அவர் மாயமானார். சுரேஷ் கோபி மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேஎஸ்யு தலைவர் கோகுல் கூறியது: ஒரு எம்பி என்றால் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக அடிக்கடி தொகுதிப் பக்கம் வரவேண்டும். ஆனால் சட்டீஸ்கரில் கேரள நர்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் கடந்த சில வாரங்களாக சுரேஷ் கோபி தொகுதிக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இதனால் தான் சுரேஷ் கோபி காணாமல் போனதாக கூறி நான் போலீசில் புகார் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.