நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரிடம், விருதுகள் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மேயர்கள், ஆணையர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரிடம் 15.08.2025 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலத்திற்கான முதலாவது பரிசினை கொளத்தூர் மண்டலமும், இரண்டாம் பரிசினை அடையாறு மண்டலமும் பெற்றது, சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசினை ஆவடி மாநகராட்சியும், இரண்டாவது பரிசினை நாமக்கல் மாநகராட்சியும் பெற்றது, சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசினை இராஜபாளையம் நகராட்சி, இரண்டாம் பரிசினை இராமேஸ்வரம் நகராட்சி, மூன்றாம் பரிசினை பெரம்பலூர் நகராட்சி பெற்றது, சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசினை உத்திரமேரூர் பேரூராட்சியும் (காஞ்சிபுரம் மாவட்டம்), இரண்டாம் பரிசினை காட்டுபுதூர் பேரூராட்சியும் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), மூன்றாம் பரிசினை நத்தம் பேரூராட்சியும் (திண்டுக்கல் மாவட்டம்) பெற்றது.
அதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரை இன்று விருதுகள் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மேயர்கள், ஆணையர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள், மண்டல அலுவலர்கள், நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர், முனைவர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், ஜெ.குமரகுருபரன், நகராட்சி நிர்வாக இயக்குநர், மதுசுதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர், எம்.பிரதிப் குமார், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.