விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை இழுத்தடித்த அதிகாரிகளுக்கு அமைச்சர் டோஸ்
விருதுநகர் : விருதுநகரில் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை இழுத்தடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரரை அமைச்சர் தங்கம்தென்னரசு கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அரசு அருங்காட்சியகம் 10.03.2001ல் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அருங்காட்சியகத்தில் பல்வகை பிரிவுகளை சேர்ந்த 1,200 அரும்பொருட்கள் காட்சியக இருப்பில் உள்ளன. வாடகை கட்டிடத்தில் இயங்கும் அருங்காட்சியகத்தை சொந்த கட்டிடத்தில் மாற்றியமைக்க மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் 2 ஏக்கரில் ரூ.6.80 கோடியில் புதிய அருங்காட்சியகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அருங்காட்சியக புதிய கட்டிட பணி கடந்த 2024 பிப்.26ல் துவங்கியது. 2025 ஆக.25ம் தேதி பணிகள் நிறைவு செய்ய வேண்டும். தற்போது 50 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பார்வையிட்டார். அப்போது, ‘‘கட்டுமான பணிகளை எப்போது முடிப்பீர்கள்’’ என கேட்டார். அதற்கு, ‘‘3 மாதங்களில் முடிக்கப்படும்’’ என பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் தெரிவித்தனர்.
உடனே அமைச்சர் கோபத்துடன், ‘‘நீங்கள் கட்டி முடிக்கும் வரை நாங்கள் முதல்வரை வெயிட் பண்ண சொல்றதா? கட்டிட மேல்பகுதி டூம் அமைப்பதற்கே 70 நாட்கள் ஆகிவிட்டது. கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. 2, 3 முறை கேட்டாச்சு. இன்னும் டிஸ்பிளே, லைட்டிங் என நிறைய வேலையிருக்கு. இதையே இன்னும் முடிக்கவில்லை. நீங்கள் லேட் பண்ண, பண்ண எல்லாம் லேட்டாகும். மியூசியம் என்பது வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து உங்களை கூறி வருகிறேன்.
டூம் போடுவதற்கே உங்களை கெஞ்ச வேண்டி இருந்தது. இதில் உங்களுக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாமே? அந்த பிரச்னைகளை தீர்க்கத்தான் நாங்கள் இருக்கிறோம். தொல்பொருட்கள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல. மதிப்புமிக்கவை. அதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மெத்தன போக்கு சரியில்லை’’ என கடிந்து கொண்டார். மேலும், ஒப்பந்தகாரரை அழைத்து விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் சுகபுத்ரா, ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் மாதவன், காப்பாட்சியர் பால்துரை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.