இராயபுரத்தில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உருது நடுநிலைப் பள்ளியின் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
சென்னை: இராயபுரத்தில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியின் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று (01.09.2025) முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு , இராயபுரம் மண்டலம், வார்டு - 60, மண்ணடி, அங்கப்பன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 1.89 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். பின்னர், பள்ளி மாணவர்ளுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
இந்த பள்ளிக் கூடமானது, தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 6118 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 4 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், மற்றும் அலுவலக அறை என 6 அறைகளும், முதல் தளத்தில் 6 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், மற்றும் உள்விளையாட்டு அறை என 7 அறைகளும் ஆக மொத்தம் 13 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மேயர் ஆர். பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.