வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. 2 அர்ச்சகர்களும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றது, திமுக அரசின் சாதனை: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!!
இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள், ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 2 அர்ச்சகர்களும் குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்; திருச்சி, வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இச்சாதனைகளால் மனம் மகிழ்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.