ஓட்டேரி அருள்மிகு அனுமந்தராயர் கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
சென்னை: ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான சென்னை ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள கடந்த 01.03.2024 அன்று பாலாலயம் செய்யப்பட்டது. இத்திருக்கோயில் சாலை மட்டத்திலிருந்து 4 அடி பள்ளத்தில் அமைந்திருந்ததால் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கருங்கல்லினால் புதிய கருவறை மற்றும் முன்மண்டபம் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மற்றும் ஏராளமான இறையன்பர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 3,672 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 49 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ராஜன், மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, உதவி ஆணையர் க.சிவகுமார், திருக்கோயில் செயல் அலுவலர் நித்யகலா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.