செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துவிட்டால், நெல் தேங்கும் நிலை இருக்காது : அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 600 நெல் மூட்டைதான் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் ," என குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள்தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் அக்.1ல் நெல் கொள்முதல் செய்யப்படும்; திமுக ஆட்சியில் செப்.1 முதலே கொள்முதல் செய்யப்படுகிறது.
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும். 22% ஈரப்பத நெல்லை கொள்முதலுக்கு ஒன்றிய அரசிடம் அதிமுகவினர் அனுமதி பெற்று தாருங்கள். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது. போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை இல்லாத அளவுக்கு 4,000 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.8.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் அளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 7,76,650 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மட்டுமே கட்டப்பட்டது. 2021 முதல் தற்போது 8,55,850 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட நாகையில் 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது."இவ்வாறு தெரிவித்தார்.