அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று வெளியிட்டார்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கர் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர். நம்மை முன்னேறவிடாது இறுகப் பிடித்து இன்னல்கள் பல விளைவிக்கும் சாதி எனுங்கோட்பாட்டை நீக்கிட வேண்டும் என்று சமத்துவ முரசு கொட்டியவர். சாதி, சமயங்கள், மதபேதங்கள், உயர்வு - தாழ்வு இவையெல்லாம் அகற்றவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கவும் அயராது உழைத்தவர். அண்ணல் அம்பேத்கரின் அனைத்து படைப்புகளும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவர் செந்தலை ந. கவுதமன், பேராசிரியர் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக் கலப்பினை அகற்றி மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 13.01.2025 அன்று வெளியிடப்பட்டன.
முதற்கட்டமாக வெளியிடப்பட்டு அச்சிடப்பட்ட 10 தொகுதிகளின் விற்பனை தொடங்கிய இரண்டு திங்களுக்குள் 2000 படிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் பெறப்பட்ட ரூ.14,00,000/- (ரூபாய் பதினான்கு இலட்சம் மட்டும்) அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக மொழிபெயர்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன – 4 தொகுதிகள்; இந்து மதம், மார்க்சியம், மத மாற்றம் – 4 தொகுதிகள்; புத்தர் – அவரது தம்மம் – 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (13.08.2025 – புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில், வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், நெறியாளுகை உறுப்பினர்கள் பேராசிரியர் வீ. அரசு, அ. மதிவாணன் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த சோ. சண்முகநாதன், ஆ.சிவக்குமார், மா. சிவக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.