ஈரோட்டில் மினி டைடல் பூங்கா திட்டம், வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய அரசு டெண்டர்
சென்னை: தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐடி சேவை துறை தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நியோ டைடல் பார்க் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதில், சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும்விதமாக மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான திட்ட மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை தேர்வு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டதும் அடுத்தகட்டமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த பூங்கா மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே, விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பட்டு வருகிறது. திருப்பூர், வேலூர், காரைக்குடி, திருவண்ணாமலையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.