அவிட்டம் மைதானத்தில் அமையவுள்ள மினிடைடல் பார்க்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
நாகர்கோவில் : நாகர்கோவில் அவிட்டம் திருநாள் மைதானத்திற்கு பதில் வேறு இடத்தில் மினிடைடல் பார்க்கை மாற்ற வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசுகையில், நாகர்கோவிலில் அனாதை மடம் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் அவிட்டம் திருநாள் மைதானம் திருவிதாங்கூர் மன்னரால் வழங்கப்பட்டது. இந்த மைதானத்தை கடந்த 2009ம் ஆண்டு வருவாய்த்துறையினர் அபகரிக்க முயன்றனர்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை சேகரித்து கடும் போராட்டம் நடத்தி அதனை தடுத்தனர். அனாதைகள் பராமரிக்க மட்டுமே இந்த இடத்தை பயன்படுத்த, திருவிதாகூர் அரசு மற்றும் இடத்தை தானமாக வழங்கியவர்கள் நிபந்தனையும் விதித்துள்ளனர்.
மேலும், மாநகராட்சிக்கு இது அதிக வருவாய் தரும் திடலாகவும் உள்ளது. இந்நிலையில் அவிட்டம் திருநாள் மைதானத்தில் ஐ.டி. பார்க் அமைக்க கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அவிட்டம் திருநாள் மைதானத்தில் மினிடைடல் பார்க் அமைக்க கூடாது.
மாநகராட்சியில் வரி விதிப்பு அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் வரிகளை உயர்த்தி வசூலிக்கின்றனர். மாநகரில் பாதாள சாக்கடை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
அவற்றை சீர்படுத்த வேண்டும். மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் கவுன்சிலர்களிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகள் செயல்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புதியதாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளை கழட்டி சென்றால், அதனை திரும்ப பொருத்த 5 நாட்களுக்கு மேல் ஆக்குகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.
சின்னவண்ணான்விளை கல்லறை தோட்டம் பகுதியில் தனியார் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும். வலம்புரிவிளை உரக்கிடங்கால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் நிலத்தடி நீரும் நிறம் மாறி மாசடைந்துள்ளது.
எனவே அதனை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதையடுத்து மேயர் மகேஷ் பதில் அளித்து பேசியதாவது: மாநகராட்சியில் அதிக வரி விதிக்கும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை அந்தந்த வார்டு பகுதிகளில் நடத்தும்போது கவுன்சிலர்களிடம் கலந்தாலோசித்து மக்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகள், மண்டபங்களில் நடத்த அறிவுறுத்தப்படும். பாதாள சாக்கடை கட்டணம் முறைப்படுத்தப்படும். நாகர்கோவிலில் மினிடைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதே நேரத்தில் பாரம்பரியம் மிக்க அவிட்டம் திருநாள் மைதானத்தில் மினிடைடல் பூங்காவை அமைப்பதற்கு பதில் வேறு இடத்தில் மினிடைடல் பூங்காவை அமைக்க நான், துணைமேயர் உள்பட 52 கவுன்சிலர்கள் சார்பிலும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. (அப்போது அனைத்து கவுன்சிலர்களும் மேஜைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.) புதிய தெருவிளக்குகள் அமைக்கத்தான் ஆணையர் அனுமதி வேண்டும்.
பழுதான தெருவிளக்குகளை மாற்றுவதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. உடனுக்குடன் பழுதான தெருவிளக்குகளை மாற்ற வேண்டும். வலம்புரிவிளை உரக்கிடங்கு நீண்ட கால பிரச்னை. அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆக்ரமிப்புகளை அகற்ற நகரமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்னமும் பேரூராட்சியாக உள்ளது
கவுன்சிலர்கள் பேசுகையில், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி, நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போதே நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியாக தரமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், சில பகுதிகளில் இன்னமும் மாநகராட்சி பெயர் பலகைகளில் ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி என்றே உள்ளது. இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றனர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பொறியாளரை அழைத்த மேயர், ஏன் பெயரை மாற்றவில்லை. உடனடியாக பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டார்.
தரமற்ற இறைச்சி விற்பதாக புகார்
கவுன்சிலர்கள் பேசுகையில், நாகர்கோவிலில் தரமற்ற இறைச்சி பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதனை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கு மேயர் மகேஷ் பதில் அளிக்கையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கிருஷ்ணன்கோவில் மற்றும் இளங்கடையில் உள்ள ஆடு, மாடு அடிக்கும் கூடங்களில் ஆடு, மாடு வெட்ட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆடு மற்றும் மாடுகளை வெட்டும் முன்பு கால்நடை மருத்துவர் சான்று பெற்று வெட்டுவதற்கும், வெட்டிய பின்னர், மாநகராட்சி சீல் வைத்த பின்னரே கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்ல வேண்டும். விரைவில் இந்த கூடங்கள் செயல்பாட்டிற்கு வரும். இதுதவிர இதர இரு மண்டலங்களிலும், தலா ஒரு ஆடு, மாடு வெட்டும் கூடம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.