பைக் மீது மினி லாரி மோதல் கணவருடன் வேலைக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியை பலி
*லாரி டிரைவர் கைது
வீரவநல்லூர் : சேரன்மகாதேவி அருகே கணவருடன் பைக்கில் வேலைக்குச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மினி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேரன்மகாதேவி அருகே வேலியார்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் ஜான் கிறிஸ்டோபர் (52). இவரது மனைவி அன்புசெல்வி (50). இவர் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ஆல்வின் (19). சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
அன்புசெல்வியை கணவர் கிறிஸ்டோபர், தினமும் பள்ளிக்கு பைக்கில் வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஆசிரியை அன்புசெல்வி, கணவருடன் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். இருவரும் கங்கனாங்குளம் குளக்கரையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை நோக்கி வந்தனர். அப்போது எதிரே வந்த செங்கல் சூளைக்கு சொந்தமான லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஆசிரியை அன்புசெல்வி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது கணவர் தலையில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ஜான் கிறிஸ்டோபரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் அன்பு செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து மினி லாரி டிரைவரான கங்கனாங்குளம் புதுக்கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் சேர்மதுரை (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.