கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு.. முதலிடத்தில் மஹாராஷ்டிரா: தமிழ்நாடு எந்த இடம்?
டெல்லி: இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வச் செழிப்பு வியத்தகு அளவில் அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டில் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்து 8.71 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு -2025 வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; இந்தியாவின் செல்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. 1.78 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட மாநிலமாக மராட்டிய முன்னணியில் உள்ளது. அதை தொடர்ந்து டெல்லி 79,800 குடும்பங்களுடன் தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 72,600 குடும்பங்கள், கர்நாடகாவில் 68,800 குடும்பங்கள், குஜராத்தில் 68,300 குடும்பங்கள் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவில் வலுவான செல்வ உருவாக்கத்தை இந்த நிலவரம் காட்டுகிறது. நாட்டில் 1.42 லட்சம் பணக்கார குடும்பங்களுடன் மும்பை நாட்டின் கோடீஸ்வர தலைநகரமாக உள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) நகரங்கள் உள்ளன. டிஜிட்டல் பணம் செலுத்துதல் (35சதவீதம் யுபிஐ பயன்பாடுகள்), பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளை கோடீஸ்வரர்கள் அதிகம் விரும்புவதாக கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.