மருதடியில் வேப்ப மரத்தில் காட்டுத்தீப் போல பால் வடிந்த அதிசயம்: அம்மன் அருள் இருப்பதாக விழுந்து வணங்கிய மக்கள்
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் வேப்ப மரத்தில் பால் வடிவதை பார்வையிட்ட மக்கள் அம்மன் அருள் இருப்பதாக கூறி விழுந்து வணங்கினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மருதடி கிராமத்தில் ஊருக்கு கிழக்கே விஜயகோபாலபுரம் செல்லும் மண் சாலையில் ஒரு மயானம் அமைந்திருக்கிறது. இந்த மயானம் அருகே ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மயானம் அருகே விவசாய நிலங்களும் உள்ளன. தினமும் விவசாய நிலத்துக்கு வரும் மக்கள், மயானத்தின் அருகே உள்ள சாலையை பயன்படுத்துவது வழக்கம். அதன்படி இன்று விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற மக்களுக்கு அதிசயம் காத்திருந்தது.
அதாவது மயானம் அருகே இருந்த வேப்ப மரத்தில் இருந்து திடீரென்று பால் வடிந்து கொண்டிருந்தது. அதாவது வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து கீழே பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த செய்தி காட்டு தீப்போல பரவ தொடங்கியது. இதையடுத்து வேப்ப மரம் இருந்த பகுதிக்கு மருதடி கிராமம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் படையெடுத்து வந்து பார்வையிட்டனர். எப்படி மரத்தில் இருந்து பால் வடிகிறது என்பதை ஆச்சரியமாக பார்த்தனர். இருப்பினும் எப்படி பால் வடிந்தது என்பதை யாராலும், யூகிக்க முடியவில்லை.
இதனால் வேப்பமரத்தில் அம்மன் அருள் இருப்பதாக நினைத்த கிராம மக்கள், அதில் தெய்வம் இருப்பதாக கூறுவதுடன், விழுந்து வணங்கி செல்கின்றனர். வேப்ப மரத்தில் பால் வடிந்த சம்பவம் மருதடி கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.