தினந்தோறும் ரூ.2,500... பால் மூலம் கிடைக்கும் பக்கா வருமானம்!
முப்பது பசுக்கள், இருபது எருமைகள் என எங்கு பார்த்தாலும் மாடுகளால் நிறைந்திருக்கிறது உமாபதியின் தொழுவம். 40 வருடங்களாக கால்நடை வளர்ப்பைத் தொடர்ந்து செய்துவரும் திருவள்ளூர் அரண்வாயில் கிராமத்தைச் சேர்ந்த இந்த உமாபதியின் கதையைத் தெரிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் அவரது தொழுவத்திற்கு சென்றோம். பால் கறப்பது, கன்றுகளை அவிழ்த்து மாடுகளோடு விடுவது, தொழுவத்தை சுத்தம் செய்வது என அவரது தொடர் வேலைகளுக்கு நடுவே எங்களோடு பேசத் தொடங்கினார். `` 1964ல் பிறந்த நான் 1970லே விவசாய வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 6 வயசுலயே விவசாயமா? எப்படினு கேட்கிறீங்களா? ஆமா, அப்ப எங்க அப்பாதான் விவசாயம் செஞ்சுட்டு இருந்தாங்க. நெல், கரும்பு, காய்கறிகள்னு எல்லாமே சாகுபடி செஞ்சாங்க. அப்ப, நான் சின்ன பையனா இருக்கும்போது கத்தரிக்காய், வெண்டக்காய் போன்ற காய்கறிகள் பறிப்பதற்காக என்னையும் வயலுக்கு கூட்டிட்டு போவாங்க. அதான் சொல்றேன், நான் 6 வயசுல இருந்தே விவசாய வேலைகள் செஞ்சுட்டு இருக்கேன்னு… என தனது பேச்சைத் தொடங்கிய அவர், மேலும் தொடர்ந்தார்.
எனக்கு 40 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. குடும்பத்தோடு சேர்ந்து மொத்தமா விவசாயம் செஞ்சுட்டு இருந்த நான், கல்யாணத்துக்கு அப்பறம் தனியா விவசாயம் செய்யலாம்னு யோசிச்சேன். அதனால, ஆரம்பத்துல எருமை மாடு வாங்கி பால் கறந்து விற்பனை செய்யலாம்னு முதலில் இரண்டு எருமைகள் வாங்கினேன். அதிலிருந்து காலை, மாலை என இரண்டு முறை பால் கறந்து விற்பனை செய்துட்டு வந்தேன்.இந்த இரண்டு மாடுகள்தான் என்னோட ஆரம்பக்கட்ட பால் தொழிலுக்கு அடித்தளம். அந்த ரெண்டு மாடுகள்ல இருந்துதான் பசுவும், எருமையுமா இப்ப 50 மாடுகள உற்பத்தி செய்திருக்கேன் என அவரது கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தினார். வருடம் ஒரு மாடு வாங்கனும். அதுதான் என்னோட குறிக்கோள். அதற்காக ஊருல சின்னதா பைனான்ஸ்ல சீட்டு போட்டு ஒவ்வொரு மாடா வாங்குனேன். அதுபோக, என்கிட்ட இருக்கிற மாடுகள் போடுறகன்றுகளையுமே வளர்ப்பேன். இப்படி ஒவ்வொரு மாடு வாங்குனதுக்கு பின்பும் ஒவ்வொரு கதை இருக்கு. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வதுதான் என்னோட முதல் வேலை. நான் மட்டுமில்ல, என்னோட மனைவி, மகன், மருமகள் என அனைவருமே காலை ஐந்து மணிக்கு எழுந்து நேரா தொழுவ வேலைகளைத்தான் பாப்போம். ஒரு ஆள் சாணம் அள்ள, இன்னொரு ஆள் பால் பாத்திரம் தேய்க்க, மீதி ரெண்டு பேரும் ஒவ்வொரு மாடா பால் கறந்துட்டு வருவோம். அதேபோலத்தான், சாயங்காலமும். மாலை 5 மணிக்கும் இதே வேலை தொடரும். காலைல 5 மணிக்கு எழுந்து மாட்டுக்கான வேலைகளை பார்த்துட்டு இரவு தூங்க 10 மணி ஆகும்.
கன்றும் மாடுகளுமா சேர்த்து இப்போ மொத்தம் 50 மாடுகள் இருக்கு. இந்த 50 மாடுகள்ல இப்ப 20 மாடுகள்ல இருந்து பால் கறக்குறோம். சராசரியா ஒரு நாளைக்கு பசு மாடுகள்ல இருந்து காலை, மாலை இரண்டு வேளையும் சேர்த்து 30 லிட்டர் பால் கறப்போம். அதேபோல, எருமை மாடுகள்ல இருந்து இரண்டு வேளையும் சேர்த்து 20 லிட்டர் பால் கறப்போம். ஒரு நாளைக்கு சராசரியா 50ல இருந்து 60 லிட்டர் பால் கறக்குறோம். இந்தப் பாலை நாங்களே நேரடியாக ஆவின் மற்றும் ஜெர்ஸி நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறோம். பாலின் தரத்தைப் பொருத்து ஒரு லிட்டர் பால் ரூ.50ல் இருந்து ரூ.70வரை விற்பனை ஆகிறது. அங்கு கொடுத்தது போக மீதமுள்ள பாலை, மக்களுக்கு நேரடியாகவும் விற்பனை செய்கிறோம். இதுதான் எங்க குடும்பத்தோட தொழில். ஒரு நாளைக்கு சராசரியா 50 லிட்டர் பால் வந்தாலும் கூட, அதை ஒரு லிட்டர் ரூ.50க்கு விற்பனை செய்தால், நாள் ஒன்றிற்கு ரூ.2500 வருமானமாக கிடைக்கிறது. அந்த வகையில் சராசரியாக மாதம் ரூ.75 ஆயிரம் பாலில் இருந்து வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தில் மாடுகளுக்கு தீவனச் செலவெனப் பார்த்தால் மாதம் பதினைந்து ஆயிரம் ஆகும். அதேபோல, வருடத்திற்கு ஒருமுறை 50 ஆயிரத்திற்கு வைக்கோலும் வாங்குவோம். தீவனம், வைக்கோல் செலவு போக மீதமுள்ள பணம்தான் எங்களுக்கானது. இந்த பால் தொழில் செய்வதன் மூலம், தினசரி வருமானத்தை எடுத்துவிட முடியும். அதுபோக, வேறு இடத்திற்கு சென்று வேலை பார்த்தால் என்ன சம்பளம் கிடைக்குமோ, அதை நாங்கள் எங்களது சொந்த வேலைகளில் இருந்தே எடுக்க முடியுது’’ என மகிழ்ச்சியோடு
பேசிமுடித்தார் உமாபதி.
தொடர்புக்கு:
உமாபதி: 80562 83611.
50க்கும் அதிகமான மாடுகளை வளர்த்து அதிலிருந்து பால் உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் உமாபதி, வருடத்திற்கு ஒரு முறை கன்றுக்குட்டிகளை விற்றும் வருமானம் பார்க்கிறார். அதாவது, அவரது பண்ணையில் உள்ள மாடுகள் ஈனும் கன்றுகளில் பெண் கன்றுகளை அவரே வளர்த்துவிட்டு, ஆண் கன்றுகளை வளர்த்து விற்று விடுவேன் என்கிறார். இதன்மூலமும், மாடுகளில் இருந்து வருடத்திற்கு ஒருமுறை கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்கிறார்.