மீலாது நபியை முன்னிட்டு கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னை: மீலாது நபியை முன்னிட்டு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொதுச்செயலாளர்):. நபிகள் நாயகம் போதித்த சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள். எனவே, அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம். இந்தப் புனிதம் மிக்க நன்னாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் போதிக்கிறார் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில் கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
செல்வபெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற வாழ்த்துகள்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புமணி (பாமக தலைவர்): உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதில் அனைவரும் நபிகள் நாயகத்தை முன்னோடியாக ஏற்க வேண்டும். மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைந்ததாக மாற வாழ்த்துக்கள்.