நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் நள்ளிரவு சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி 3 வாலிபர்கள் பலி
*டீ குடிக்க வந்த போது பரிதாபம்
நெல்லை : நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் நள்ளிரவில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடையில் டீ குடிக்க வந்த போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு கடந்த 6ம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை ஆலங்குளத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். சந்திப்பு பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் தென்காசிக்கு பஸ் புறப்பட்டு சென்றது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது டவுனில் இருந்து சந்திப்பு பகுதிக்கு வந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த வாலிபர்கள் 3 பேர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் நெல்லை டவுன் வையாபுரி தெருவைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் லோகேஷ் (23), இவரது நண்பர்கள் டவுன் முகம்மது அலி தெருவைச் சேர்ந்த சாதிக் (22), சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது.
இதில் சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கோவையில் இருந்து நேற்று முன்தினம் காலையில் தான் நெல்லைக்கு வந்துள்ளார். சாதிக் பாளையில் ஒரு உணவகத்தில் வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடிக்க பைக்கில் வந்த போது ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசு பஸ் மோதி விபத்தில் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்ததை கேள்விபட்டு சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.