சென்னை: கொல்கத்தாவில் இருந்து 170 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வலியால் துடித்தார். அப்போது, விமானம் சென்னையில் தரையிறங்க இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தது. இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, பயணி ஒருவர் நெஞ்சுவலியால் துடிப்பதாகவும், அவசரகால அடிப்படையில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அவசர கால அடிப்படையில், சென்னையில் தரையிறங்கியது. ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்த விமான நிலைய மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்து விட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்பு விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் இறங்கி சென்றனர்.