எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி விஜய் கட்சிக்கு அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்கள்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை: தவெக மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேசிய நடிகர் விஜய ‘‘பாசிச பாஜவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க நாம என்ன உலக மகா ஊழல் கட்சியா? அடிமை கூட்டணி நமக்கு எதுக்கு? தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்த பாஜவுக்கு ஒரு கூட்டணி. அதற்கு ஒரு ஊழல் கட்சியை மிரட்டி பயணம் செய்யலாம் என நினைக்கிறார்கள். இந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்.
மத நல்லிணக்கம் உள்ள மண் இது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்சி காப்பது? அதிமுக கட்சி இன்று எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள்” என்று அதிமுகவை சரமாரியாக குற்றம்சாட்டி விஜய் பேசினார். நடிகர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
எல்லோராலும் எம்ஜிஆர் ஆகிட முடியாது. எல்லோராலும் ஜெயலலிதா ஆகிட முடியாது. உலகத்திற்கே ஒரு எம்ஜிஆர், உலகத்திற்கே ஒரு ஜெயலலிதா. வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரை பயன்படுத்துறது, அண்ணா புகைப்படம் பயன்படுத்துறது, எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துறது, நான் தான் எம்ஜிஆர் மாதிரி என்று சொல்வது எல்லாம் தேர்தல் யுக்தி. இதெல்லாம் எப்படி சொன்னாலும் சரி, எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக.
அவர்தான் கட்சிக்கே முழுமையான சொந்தக்காரர். அதனால், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்த கை, வேறு எந்த கட்சிக்கும் வாக்குகள் போடாது. எங்கள் தலைவரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்டது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அது உங்களுக்கு (தவெக) வாக்குகளாக வருமா என்றால் நிச்சயமாக வராது. அதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.