எம்ஜிஆர் குறித்த விமர்சனம்; திருமாவளவன் திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை: எம்ஜிஆர் குறித்து விமர்சனத்தை திருமாவளவன் திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : அண்ணா மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர். மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி அமைய வழிவகுத்தது. இப்படிப்பட்ட மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக திருமாவளவன் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.