எம்ஜிஆர் பற்றி விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்: திருமாவளவன் மீது எடப்பாடி பாய்ச்சல்
ஓமலூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் சேலம் வந்தார். நேற்று காலை, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அவர்களை எடப்பாடி பழனிசாமி வரவேற்று பேசினார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: எம்ஜிஆர் தான் திராவிட கட்சிக்கு, பார்ப்பனரை தலைவராக்கியதாக திருமாவளவன் கூறுகிறார். எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும்.
எம்ஜிஆரை தமிழ்நாட்டு மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்பவர்கள், அரசியலில் காணாமல் சென்று விடுவார்கள். அதிமுகவை பொறுத்தவரை ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதம், அனைத்து ஜாதியை சேர்ந்தவர்கள் எங்கள் இயக்கத்தில் உள்ளனர். சில பேருக்கு பொறுக்கவில்லை, எரிச்சல். அவர் நினைத்தது நடைபெறவில்லை. அந்த வெறுப்பின் நிலைப்பாடு தான் இப்படி கக்கிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. சிறப்பான கூட்டணி அமையும். அப்போது உங்களையெல்லாம் அழைத்து கூறுவேன். பாமக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை. அது சரியாக இருக்காது. அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்ப்பது குறித்த பேச்சு மறந்துபோன விஷயம். அதனை செய்தியாளர்கள் தான் நினைவூட்ட பார்க்கிறீர்கள். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.