மெக்சிகோவை புரட்டிப் போட்ட புயல்: நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் மேற்கு கடற்கரையில் உருவான பிரிசில்லா மற்றும் ரேமண்ட் ஆகிய இரண்டு வெப்பமண்டல புயல்கள், கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஹிடால்கோ, புப்லா, குட்டாரோ மற்றும் சான் லூயிஸ் பொட்டோசி ஆகிய ஐந்து மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி நேற்று வரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவரவில்லை. இந்த பேரிடரைத் தொடர்ந்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் தலைமையிலான அரசு, அவசரகால மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ராணுவம், விமானப்படை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5,400க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.