மேட்டூர் அணையில் இருந்து 1,10,500 கனஅடி உபரிநீர் திறப்பு: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
அங்குள்ள அருவிகளை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 1 லட்சத்து 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணியளவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. ஏற்கனவே அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருப்பதால், 1 லட்சத்து 10 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறப்பால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோயில் அருகே காவிரி கரையோரம் பருத்தி, சோளம், வாழை, தென்னை மரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. காவிரியில் வெள்ளப்பெருக்கால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. குமாரபாளையம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருபுறமும் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 97,474 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று முக்கொம்புவிலிருந்து காவிரியில் 22,350 கன அடியும், கொள்ளிடத்தில் கூடுதலாக 43,664 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்ததை அடுத்து, திருச்சி நீர்வளத் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தன் முக்கொம்பு மேலணையில் நேற்று மாலை ஆய்வு செய்தார். நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட 1 லட்சம் கனஅடி நீர், இன்று (நேற்று) மாலை வந்தது. எனவே, முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றனர். திருச்சி கலெக்டர் சரவணன் கூறுகையில், எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ கூடும். எனவே, பருவமழைக் காலம் முடியும் வரை கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
வால்பாறை மற்றும் கேரள மாநில எல்லையில் தென்மேற்கு பருமழை பெய்து வருகிறது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது, ஒரு காட்டு யானை ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், யானை தத்தளித்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, யானை வெள்ளத்தை கடந்து பாதுகாப்பாக கரை சேர்ந்தது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் வைரலாக்கி உள்ளனர்.