உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறப்பு; டெல்டாவில் 5.6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: கடந்தாண்டை விட 75,000 ஏக்கர் அதிகம்: விவசாயிகள் உற்சாகம்
தஞ்சை: மேட்டூரில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டாவில் இந்தாண்டு 5.63 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. கடந்தாண்டை விட 75 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக சாகுபடி நடந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதேபோல் சாகுபடி பணிகள் முடிந்ததும் ஜனவரி 28ம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உட்பட 12 மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் வரத்தை பொறுத்து குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறும். இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.
மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. முன்கூட்டியே ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் கடைமடை வரை உரிய நேரத்தில் சென்றது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியை துவக்கினர். இந்நிலையில் வேளாண்மைத்துறையின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,96,125 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இதுவரை தஞ்சை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1,97,500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி 1375 ஏக்கர் கூடுதலாக நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 1,52,646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 42,484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 475 ஏக்கர் என மாவட்ட நிர்வாகத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது கூடுதலாக 16,305 ஏக்கர் சாகுபடி நடைபெற்று மொத்தம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 780 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.
நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இலக்கை மிஞ்சி 75,250 ஏக்கரில் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 98,250 ஏக்கரில் கலந்து ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நடைபாண்டு 99250 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 1000 ஏக்கர் கூடுதலாகும். டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு மொத்தம் 5 லட்சத்து 63 ஆயிரத்து 780 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ள நிலையில், கடந்தாண்டை விட கூடுதலாக 75,039 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.