மேட்டூர் நீர்மட்டம் 118.83 அடியாக உயர்வு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 118.83 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதேஅளவில் நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 11,397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,652 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 118.62 அடியில் இருந்து 118.83 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.61 டிஎம்சியாக உள்ளது.