மேட்டூர் அணையின் மேற்குகரை வாய்க்கால்களில் புதர்கள் அகற்றம்
மேட்டூர் அணையிலிருந்து மேற்கு மற்றும் கிழக்குக்கரை கால்வாய் பாசனத்திற்கு கடந்த 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தண்ணீர் நிறுத்தப்பட்ட பிறகு வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுவதாகவும், தண்ணீர் கடைமடை வரையில் தண்ணீர் செல்லும் வகையில் பகிர்மான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில் மேற்குக்கரை கால்வாயின் காடையம்பட்டி, ஊராட்சிக்கோட்டை பகிர்மான வாய்க்காலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை ஊழியர்கள் வெட்டி அகற்றினர். மேலும், தென்னை மட்டைகள், குப்பைகளும் அகற்றப்பட்டு, தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர். கிளை வாய்க்கால்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.