மேட்டூர் அணையில் நீர் திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து இன்று 2வது நாளாக நீர்திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக நீடிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் ஆற்றில் 42,994 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. மேலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழை, கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 55,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 65,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து அதே அளவிற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 42,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இவை தவிர கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.