மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்வதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்குள் உலா வந்தது. அங்கு சாலையோரம் இருந்த புற்களை பறித்து உண்டது. அதிகாலை நேரம் வீட்டைவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு அச்சமடைந்தனர். இது குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.