மேட்டுப்பாளையத்தில் வனத்துறை ஜீப்பை தாக்க முயன்ற ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு: வனக்கல்லூரி கேட்டை உடைத்து புகுந்தது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த பாகுபலி யானை வனத்துறை ஜீப்பை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது. இந்த யானை இதுவரை பொதுமக்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவும் இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வந்த பாகுபலி யானை நேற்றிரவு வனக்கல்லூரி வழியாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றது. அப்போது, வனக்கல்லூரியின் புதிய நுழைவு வாயில் கேட்டை உடைத்து உள்ளே சென்றது.
இத்தகவலறிந்த அறிந்த மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் யானையை விரட்டும் ஜீப் மூலம் பாகுபலி யானையை அச்சுறுத்தி, எரிச்சலூட்டும் வகையில் விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது ஜீப்பை பாகுபலி யானை தாக்க முயன்றது.தொடர்ந்து ஜீப் மூலம் சைரனை ஒலிக்க விட்டு சப்தமிட்ட படியே யானையை வனத்துறை ஊழியர்கள் விரட்டினர். பயந்த யானை தப்பிக்க முயன்ற போது யானையை விரட்டி சென்ற ஜீப் எதிர்பாராத விதமாக யானையின் காலில் மோதியது.
தொடர்ந்து பிளிறியபடி அங்கிருந்து சென்ற பாகுபலி யானையை வனத்துறை வாகனங்கள் தொடர்ந்து சென்று கோத்தகிரி சாலையை கடந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன.
இதனால் நேற்றிரவு கோத்தகிரி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.