மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க 220 ஏசி மினி பஸ்கள்: போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 220 ஏசி மினி பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கலைஞர் முதல்வராக இருந்தபோது மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டன. அந்தவகையில் கடந்த 2015ம் ஆண்டு விம்கோ நகர் - விமானம் நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் வரை அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ சேவை, தற்போது பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்ட உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி முறை மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கும் வசதியாக, இலவச சைக்கிள், வாடகை பைக், ஆட்டோ, இ-சைக்கிள் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை நடைமுறையில் உள்ளன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக 11 வழித்தடங்களில் 22 சிறிய பேருந்துகள் மெட்ரோ நிலையங்களுக்கு இணைப்பாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 220 ஏசி மினி பஸ்கள் மூலம் மெட்ரோ நிலையங்களை இணைக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. 11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 6 மீட்டர் நீளம் கொண்ட புதிய மினி ஏசி மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய ஏசி மின்சார பேருந்து சேவையால் கூட்ட நெரிசல் குறையும், பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
