அடுத்த 3 ஆண்டுகளில் 25 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வணிக வளாகங்கள்: 3 மில்லியன் சதுர அடியில் அமைக்க திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 மில்லியன் சதுர அடிக்கு மேற்பட்ட அலுவலக மற்றும் வர்த்தக மையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25 நிலையங்களில் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 மில்லியன் சதுர அடிக்கு மேற்பட்ட அலுவலக மற்றும் வர்த்தக இடங்களை உருவாக்கும் வகையில் பெரிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 118.9 கிலோமீட்டர் நீள வழித்தடத்தில் 128 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் குறைந்தது 25 நிலையங்களில் இத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. 2028ம் ஆண்டுக்குள் படிப்படியாக இந்த வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ நிலையங்கள் தொழில்நுட்ப ரீதியாக பயண நிலையங்களாக மட்டுமல்லாமல், அலுவலக வளாகங்கள், ரீட்டெயில் கடைகள், ஹைப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு தளங்கள் போன்ற வசதிகள் ஒருங்கிணைந்த சிறிய வணிக வளாக மையங்களாக மாற்றப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு, திருமங்கலம் போன்ற முக்கிய போக்குவரத்து முனைகளில் பல தளங்களைக் கொண்ட உயரமான கோபுரங்கள் எழுப்பப்பட உள்ளன. மேலும், பெருங்குடி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், துரைப்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை, செம்பியம், அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு பணிமனை, திருமயிலை உள்ளிட்ட பல நிலையங்களில் கூடுதல் மாடிகளுடன் சிறிய-நடுத்தர அளவிலான வர்த்தக வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன. முதற்கட்ட திட்டத்தில் அனுபவித்த சவால்களையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு, கட்டுமான கட்டத்திலேயே சொத்து மேம்பாட்டு பணிகளைச் சேர்க்கும் உத்தரவை மெட்ரோ நிர்வாகம் தற்போது முன்னெடுத்து வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5 சந்திக்கும் இடங்கள், எதிர்காலத்தில் சென்னையின் மிகப் பெரிய தொழில் மற்றும் வணிக மையங்களாக உருவாகும். மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 மில்லியன் சதுர அடிக்கு மேற்பட்ட அலுவலக மற்றும் வர்த்தக இடங்களை உருவாக்கும் வகையில் பெரியத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.டி. நிறுவனங்களுக்கு வளர்ச்சி
ஓஎம்ஆர் பகுதி சென்னையின் ஐடி நிறுவனங்கள் பகுதியாக திகழ்ந்தாலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து மாற்று வசதிகளின் பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். ஆனால் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஓஎம்ஆர் பகுதிகளுக்கு நேரடி மெட்ரோ இணைப்பு உள்ளதால் ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய வரலாறு காணாத வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள், மாணவர்கள், வியாபாரிகளுக்கு பயன்
பணிக்கு செல்வது, மருத்துவமனைக்கு செல்வது, கல்லூரி பயணம், ஷாப்பிங், வார இறுதி பொழுதுபோக்கு உள்ளிட்டவை எல்லாம் மெட்ரோவையே சார்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 20 -25% வரை குறையக்கூடும்.
சென்னையின் அடித்தள மாற்றத்திட்டம்
இது சென்னை நகரின் அடுத்த 30 ஆண்டுகளை வடிவமைக்கும் அடித்தள மாற்றத் திட்டமாகும். வணிகம், வேலை வாய்ப்பு, நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல், பொதுப் போக்குவரத்து என எல்லா துறைகளிலும் சென்னையை புதிய காலத்திற்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய முயற்சியாகும்.
வணிக தலைமையகம்
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் மெட்ரோ நிலையங்களுக்குச் சுமார் 3 மில்லியன் சதுர அடி புதிய அலுவலக இடம் வரவுள்ளது. இதனால் சென்னை தென்னிந்தியாவின் மிகப்பெரிய வணிக தலைமையகமாக உருவெடுக்கும். நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, போட் கிளப் போன்ற உயர்நிலை பகுதிகள் பிரீமியம் ரீட்டெயில் மார்க்கெட்களாக உருவாகும். ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு சாலையில் உள்ள பகுதிகள் பெரிய அளவிளான நிறுவனங்களின் பணியகங்களாக மாறும். அதேபோல் அயனாவரம், ஓட்டேரி, செம்பியம் போன்ற பழைய குடியிருப்பு பகுதிக்குள் புதிய வணிக மையங்களாக மாறும்.