தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் நவ. 13, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
காசிமேடு, பாரிமுனை, மெரினா பீச், மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வந்தது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நவ. 13, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.