ஆடவர் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர்: அரையிறுதியில் இந்தியா 'ஏ' அணி அதிர்ச்சி தோல்வி!
கத்தார்: ஆடவர் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் அரையிறுதியில் வங்காளதேசம் 'ஏ' அணியிடம் சூப்பர் ஓவர் முறையில் இந்தியா 'ஏ' அணி அதிர்ச்சிகரமாக தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தை சமன் செய்த இந்திய இளம் நட்சத்திரங்கள், வெற்றியின் விளிம்பில் சூப்பர் ஓவரில் இறுதிப்போட்டி வாய்ப்பை கோட்டைவிட்டனர்.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வங்காளதேசம் 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹபீபூர் ரஹ்மான் சோஹன் (65), எஸ்.எம்.மெஹ்ரோப் (48*) ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய பந்துவீச்சைச் சிதறடித்தது. இந்தியத் தரப்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
195 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 'ஏ' அணியில், வைபவ் சூர்யவன்ஷி (15 பந்துகளில் 38 ரன்கள்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (44 ரன்கள்) சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் ஜிதேஷ் ஷர்மா (33), நெஹல் வதேரா (32) ஆகியோரின் பங்களிப்பால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 3 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது.
இந்தியாவின் அதிரடி வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஓவரில், வங்காளதேசத்தின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி திணறியது.
இந்தியாவின் பேட்டிங்கின்போது, கேப்டன் ஜிதேஷ் ஷர்மா முதல் பந்திலேயே போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே ஆஷுதோஷ் ஷர்மாவும் அவுட் ஆகி வெளியேற, இந்திய அணி றன் ஏதும் எடுக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வெற்றிக்கு 1 ரன்கள் மட்டுமே தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, ஒரு விக்கெட் இழந்தாலும், ஒரு 'வைடு' மூலம் தேவையான ரன்னை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது.