மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி
டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; மேகதாது அணை கட்ட நதிநீர் ஆணையம் ஒப்புதல் தர முடியாது. காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால் புதிதாக அணை தேவையில்லை. காவிரியில் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பல நேரங்களில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. 80 டிஎம்சி நீரை தடுக்கவே கர்நாடகா புதிதாக அணை கட்ட முயற்சிக்கிறது. மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நடுவர் மன்றம் மட்டுமே ஒப்புதல் தர முடியும். மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆரம்ப கட்டத்திலேயே தடை விதிக்க வேண்டும். கபினி, கேஆர்எஸ் அணையில் இருந்து வரும் உபரி நீர் புதிய அணை கட்டினால் தடுக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா செயல்படுத்தாததால்தான் தமிழ்நாடு நீதிமன்றத்தை நாடுகிறது.
மேகதாது அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. 50 ஆண்டுகளாக காவிரி நீருக்காக போராடுகிறோம்; மேகதாது அணை கட்டினால் நிச்சயம் எங்களுக்கு நீர் கிடைக்காது என்று தெரிவித்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது.
எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.