மேகதாது அணை விவகாரம் கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தடை விதித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மேகதாது அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில்,‘‘மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஆண்டு கணக்கில் உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளது. எனவே வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் கர்நாடகா அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘மேகதாது அணை தொடர்பாக வழக்கு முன்னதாக மூன்று நீதிபதிகள் அமர்வில் உள்ளது. எனவே நீங்கள் அங்கு சென்று முறையிடுங்கள். தற்போது நாங்கள் எந்தவித உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டனர்.
* சீனியர்களுக்கு அனுமதி இல்லை
உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை விரைந்து விசாரிக்கவோ அல்லது திட்டமிட்ட தேதியை மாற்றக் கூடாது என்று நீதிபதிகள் முன்னிலயில் முறையீடு செய்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவார் அமர்வில் ஒரு வழக்கு குறித்து முறையீட்டு வைக்க முன்வந்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வரும் 11ம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் மூத்த வழக்கறிஞர்களுக்கு முறையீடு செய்ய அனுமதி கிடையாது. ஜூனியர் வழக்கறிஞர்கள் மட்டுமே முறையீட்டை முன்வைக்க அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டார்.