மேகமலை வனப்பகுதியில் தொடரும் மழை: சின்ன சுருளி அருவியில் குளிக்க 7வது நாளாக தடை
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுருளி அருவியானது தென் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி ஆன்மீக ஸ்தலமாகவும் உள்ளது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அருவியில் புனிதநீராடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் தொடர்ச்சியாக தூவானம், அரிசிப்பாறை உள்ளிட்ட மேகமலை வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சுருளி அருவியில் அக்டோபர்.18ம் தேதி அன்று கடும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் மழை அளவு குறையாமல் அருவியில் நீர்வரத்து தொடர்வதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. வனத்துறை தரப்பில் தெரிவித்ததில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறையும் வரை தடை நீடிக்கும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என யாரும் சுருளி அருவிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.