மேகதாது அணை கட்ட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை: மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கம்
சென்னை: மேகதாது அணை கட்ட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்கக் கூடாது எனவும் உத்தரவு அளித்தது.
2018-ல் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது” என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் செய்தது. மேலும், “காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை” எனவும் வாதம் முன்வைத்தது. அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.
மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்தது. ”மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது.
எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு அளித்தது.