மெகா கூட்டணியை அமைப்போம்.. நாம் ஆட்சிக்கு வருவோம்.. பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் சூளுரை!
மாமல்லபுரம்: மெகா கூட்டணி அமைத்து நாம் ஆட்சிக்கு வருவோம் என்று பொதுக்குழுவில் அன்புமணி தெரிவித்துள்ளார். அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசுக்கு நெருக்கடி தரும் வகை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய அன்புமணி; ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.
பாமக நிறுவனர் ராமதாஸின் கனவுகளை லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம். மெகா கூட்டணி அமைத்து நாம் ஆட்சிக்கு வருவோம். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமைக்கப்படும். ஒட்டுமொத்தமாக அனைவரும் வாக்களித்தால் பாமகவின் ஆட்சிதான். 50 முதல் 60 இடங்கள் வரை நாம் வெற்றி பெற்றால் பாமக ஆட்சிதான். அடுத்த 6 மாத காலம் கடுமையாக ஒற்றுமையாக நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். பொதுக்குழு உருவத்தில் இல்லை என்றாலும் உள்ளத்தில் மருத்துவர் ராமதாஸ் நம்முடன்தான் இருக்கிறார். மருத்துவர் ராமதாஸுக்கு என்று ஒரு இருக்கை உள்ளது; அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
மருத்துவர் ராமதாஸ் எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. மருத்துவர் ராமதாஸிடம் 40 முறைக்கு மேல் பேசிவிட்டேன்; ஏன் நேற்று கூட பேசினேன். காலையில் ராமதாஸ் சரி என்பார்; பின்னர் பூசாரிகள் வந்த பின் நான் அப்படி சொல்லவே இல்லை என்பார். மருத்துவர் ராமதாஸை சுற்றி இருக்கக் கூடிய சிலரை சுயநலவாதிகள் என்பதா? குள்ளநரி கூட்டம் என்பதா?. நான் பிடிவாதக்காரன் இல்லை; அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்றுதான் கூறுகிறோம். பொதுக்குழுவால் முடிவு செய்யப்படுபவரே தலைவர்; பொதுக்குழுதான் கட்சியின் பலம்.
ராமதாஸால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது. தற்போது பாமகவை நிர்வகிக்கக் கூடிய சூழலில் மருத்துவர் ராமதாஸ் இல்லை. பதவிக்காக நான் வரவில்லை; சமுதாயத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதே எனது நோக்கம். ஒரு சில சுயநலவாதிகள் கட்சியை வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் அது நடக்காது. பாமகவில் நிரந்தர தலைவர் கிடையாது; நிறுவனர் மட்டுமே நிரந்தரமானவர் என்று கூறினார்.