ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கி கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்
புதுடெல்லி: நீண்டகாலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனா தனது கடற்படை வலிமையை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கடலுக்கடியில் போர் திறனை அதிகரிக்க இந்தியா 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை தயாரித்துள்ளது.
இதன்படி, ரூ.36 ஆயிரம் கோடி செலவில் பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனமான நேவல் குரூப்பிடம் இருந்து 3 ஸ்கார்பீயன் நீர் மூழ்கிக் கப்பல்களும், ரூ.65 ஆயிரம் கோடி செலவில் ஜெர்மனியனின் தைசென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 6 டீசல்-மின்சார ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு திட்டத்திலும் மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் முதல் திட்டத்திற்கு 2 ஆண்டுக்கு முன்பும், 2வது திட்டத்திற்கு 2021ம் ஆண்டிலும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இவ்விரு திட்டங்களும் அடுத்த 6 முதல் 9 மாதத்தில் இறுதி செய்யப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.