ராமதாஸ் கும்பகோணம் சென்ற நிலையில் தைலாபுரத்திற்கு வந்த அன்புமணி தாயாருடன் சந்திப்பு!
விழுப்புரம்: தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு வந்த அன்புமணி தனது தாயார் சரஸ்வதி அம்மாளை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். சமீபத்தில் ராமதாசால் கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சேலம் எம்எல்ஏ அருளின் பாமக சட்டமன்ற கொறடாவை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அன்புமணி ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து, பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகள் மூலம் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு வந்த அன்புமணி தனது தாயார் சரஸ்வதி அம்மாளை சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில் தனது தாயாரை சந்திக்க அன்புமணி வந்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் சென்றுள்ளார்.