மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
மதுரை: சிவபெருமானின் திருவிளையாடலை விவரிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சிவபெருமானின் திருவிளையாடலை விவரிக்கும் ஆவணி மூலத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் 6 நாட்கள் சந்திரசேகருக்கும், பாக்கி 15 நாட்கள் பஞ்ச மூர்த்திக்கும் விழா நடைபெறும். சிவபெருமானின் திருவிளையாடல் 10 நாட்கள் நடைபெறும். இதன்படி முதல் நாளான இன்று சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 9 மணியளவில் சுவாமியும், அம்மனும் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து கோயிலில் உள்ள குலாலர் மண்டபத்தில் காட்சி அளித்தனர்.
இதில், கருங்குருவிக்கு அருள்பாலித்த கோலத்தில் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு மீனாட்சி வெள்ளி வாகனத்திலும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும், ஆவணி மூல வீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைக் கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இது குறித்து பட்டர்கள் கூறுகையில், ‘காட்டில் ஒரு கருங்குருவி வசித்து வந்தது. அது சிறிய பறவையாக இருந்ததால், மற்ற பறவைகள் எளிதில் வந்து தாக்கின. இதனால், அது அஞ்சி இரை தேடக் கூடச் செல்லாமல் மரத்திலேயே தங்கியிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த முனிவர்கள் மரத்தின் கீழ், நிழலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். அப்போது அவர்களுக்குள் பேசுகையில், ‘மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும்’ என தெரிவித்தனர்.
இதைக் கேட்ட கருங்குருவி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சிவனின் சன்னதியில் அஞ்சியபடியே நின்று வழிபட்டது. இதையறிந்த சிவபெருமான் கருங்குருவியின் முன்பு தோன்றி, அதற்கு அச்சத்தை போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்து அதற்கு வலிமையை அருளினார். இதன்மூலம், குருவி வலிமை பெற்று, எதிரிகள் தாக்கும்போது உயரத்தில் பறந்து தப்பித்துக் கொள்ளும். அந்த கருங்குருவியின் இனத்திற்கு வலியான் என பெயர் வந்தது. இது குறித்தான சிற்பம் மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபத்தின் மேற்கு வரிசைத் தூணில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.