மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் குடமுழுக்கு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2026 பிப்ரவரியில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள விடுதியில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, அறநிலையத்துறை செயலர் ஸ்ரீதர், கலெக்டர் பிரவீண்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 3,707 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் அதிக குடமுழுக்கு நடத்தப்பட்டது தற்போதைய திமுக ஆட்சியில் தான். 2009ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். ரூ.23.70 கோடியில் 186 திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
வீர வசந்தராயர் மண்டப தூண்களுக்கான கற்கள் கிடைக்காததால் புனரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 79 தூண்களில் 18 தூண்கள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 2.2.2018ல் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை முடிக்காமலேயே குடமுழுக்கு நடத்தலாம் என அர்ச்சகர்கள் முடிவெடுத்தால் டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும். இல்லாவிட்டால் மண்டப புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் உபகோயில்கள் அனைத்திலும் வரும் பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். தேர்தலுக்குள் குடமுழுக்கு நடத்த வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆன்மிக பயணத்திற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருப்பரங்குன்றம் ரோப்கார் திட்டம் எல்காட்டிற்கு அனுப்பட்டுள்ளது. இறுதி வடிவம் பெற்ற பிறகு இதுகுறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, குடமுழுக்கிற்கான பணிகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
* கரூர் பிரச்னையில் நீதிமன்ற கருத்தே எங்கள் கருத்து
கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சருக்கு சவால் விடுத்து விஜய் வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘இரண்டு நீதிமன்றங்கள் சொன்ன கருத்து தான் எங்களது கருத்தும்’ என்றார்.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கோயிலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் உடனடியாக மதுரை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் உதவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் கோயிலின் 4 கோபுர நுழைவாயில் பகுதிகளிலும் பக்தர்கள் செல்லக்கூடிய பகுதிகள் செல்போன், காலணி வைக்குமிடம், வெளிப்புற கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பலத்த சோதனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து குண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.